உயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..!

0 7020

ழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அண்மையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால் சென்னையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக கட்டணத்தை தனியார் ஆம்புலன்ஸ்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. உயிர் போகும் நேரத்திலும் காசுக்காக பேரம் பேசும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகமாகி உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காததால், பலருக்கு ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. பல இடங்களில் மருத்துவமனைகள் முன் ஆம்புலன்ஸ்கள் வரிசை கட்டி நிற்பதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனை பயன்படுத்தி தனியார் ஆம்புலன்ஸுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்தி உத்தரவிட்டது. அதன்படி சாதாரண தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 2,000 ரூபாயும் வென்டிலேட்டர் வசதிகளுடன்கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 4 ஆயிரம் ரூபாயும் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கு பிறகும் கூட, சென்னையில் சில தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் ஒட்டுநர்கள், பேராசையின் மிகுதியில் மூன்று மடங்கு அதிகம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. உயிருக்கு போராடும் தனது உறவினரை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என போராடிக் கொண்டிருப்பவர்களை பலியாடாக நினைத்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இஸ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

முதலில், தற்போது ஆம்புலன்ஸ் எதுவும் ஃபிரி (Free) ஆக இல்லை எனக்கூறும் ஓட்டுநர்கள், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லவேண்டும் என பதறும் நோயாளியின் உறவினர்களிடம், இவ்வளவு பணம் கொடுத்தால் வருகிறோம் என பேரம் பேசும் அலவமும் அரங்கேறுகிறது.

ஆக்சிஜன் இல்லாத சாதாரண தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கே மீனம்பாக்கத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை செல்ல 6,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார் உள்ளது. மீனம்பாக்கத்திலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 15 கிலோ மீட்டர் ஆகும். சாதாரண ஆம்புலன்ஸ்களுக்கு 10 கிலோ மீட்டருக்கு 1,500 ரூபாய் மட்டுமே அரசால் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் மீனம்பாக்கத்திலிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்ல 2500ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது. ஆனால், அவசரத்தை பயன்படுத்தி அநியாயமாக 6500 ரூபாய் வரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வசூலிக்கிறார்கள்.

அதே தொலைவுக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் ஆக இருந்தால் 9 ஆயிரம் வரை பேரம் பேசுகிறார்கள்.

பத்து கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவு மட்டுமே கொண்ட தியாகராயர் நகரில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை செல்ல ஆக்சிஜன் இல்லாத தனியார் ஆம்புலன்ஸ் ஆக இருந்தால் 2,800 ரூபாயும் ஆக்சிஜன் வசதி கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் ஆக இருந்தால் 5 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மூச்சு விடவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் அவசரத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்களின் வசூல் வேட்டைகளை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments