நிரம்பும் மருத்துவமனைகள்..! காத்திருக்கும் நோயாளிகள்...

0 2129
நிரம்பும் மருத்துவமனைகள்..! காத்திருக்கும் நோயாளிகள்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்து நிரம்பியுள்ளன.

இதனால் சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் புதிதாக வரும் நோயாளிகளுக்கு பேருந்துகளில் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில், 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட ஜீரோ டிலே எனப்படும் சிறப்பு வார்டும் நிரம்பியது.

அதன் காரணமாக புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட இரண்டு பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ள்து. அதன் மூலம் பேருந்து இருக்கைகளில் அமர வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பின.

மருத்துவமனையில் உள்ள 150 சாதாரண படுக்கைகள், 325 ஆக்சிஜன் படுக்கைகள், மற்றும் அவசர சிகிச்சை பிரிவில்  உள்ள 50 படுக்கைகளும் நிரம்பின. இதனால் மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை பெற நோயாளிகள் காத்திருக்கின்றனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட படுக்கைகளும் நிரம்பின. மருத்துவமனையில் உள்ள 200 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பிய நிலையில் கூடுதலாக 10 படுக்கைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் 210 படுக்கைகளும் நிரம்பியதால் மருத்துவமனைக்கு வெளியே நோயாளிகள் வாகனங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாண்டூர் பகுதியில் கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட 54 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பின.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 113 ஆக்சிஜன் படுக்கைகளும், முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 360 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.

இதனால் புதிதாக சிகிச்சைக்காக வருவோருக்கு மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 8-வது நாளாக அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

மருத்துவமனையில் உள்ள 370 சாதாரண படுக்கைகள் மற்றும் 270 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக சிகிச்சை பெற வருவோர் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே காஞ்சிபுரத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments