கரை கடந்தது டவ் தே புயல்..! 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்காற்றால் கடலோரப் பகுதிகள் சின்னாபின்னமாகின
அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் நள்ளிரவில் கரையைக் கடந்தது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக ஏராளமான மின்கம்பங்கள்- மரங்கள் சாய்ந்து விழுந்தன.
அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்ற டவ்தே புயல், குஜராத் மாநிலம் போர்பந்தர் - மகுவா இடையே கரையை கடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதி தீவிரபுயல் நேற்று அதிகாலை மேலும் தீவிரமடைந்ததால் வேகமாக நகரத் தொடங்கி, பல மணி நேரம் முன்னதாகவே கரையை நெருங்கியது. நேற்று இரவு 9 மணியளவில் சவுராஷ்டிரா பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் டவ் தே புயல் கரையை கடக்க துவங்கியது,
புயல் கரையை கடக்க தொடங்கியதும 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. அகமதாபாத், காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மரங்கள், மின்கம்பங்கள் பல இடங்களில் சரிந்து விழ, பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி கொண்டுள்ளனர். பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புயல் பாதிப்பை சமாளிக்க ராணுவம், கடற்படை , கடலோர காவல் படை மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக களமிறங்கினர். தேசிய பேரிடர் மீட்பு படையின் 79 குழுக்கள் புயல் கடந்து செல்லும் மாநிலங்களில் தங்கள் பணியை துவக்கி விட்டனர். இதுதவிர, அவசர தேவைக்காக கூடுதலாக 22 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் இடைவிடாத மழை கொட்டி தீர்த்ததால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பல இடங்களில் இடுப்பளவு வெள்ளநீர் தேங்கி நிற்கிறது.
விமானங்கள் பல மணி நேரம் ரத்து செய்யப்பட்டு நேற்று இரவு மீண்டும் செயல்படத் தொடங்கியது. மும்பையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கடும் கடல்சீற்றம் காணப்பட்டது.
Comments