அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்..! விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

0 1711
அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்..! விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

நாளை முதல் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நடந்து வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை அறியாமல் வந்த சிலர் சாலையில் உருண்டுபுரண்டு மருந்து கேட்டு போராட்டம் நடத்திய நிகழ்வுகள் அரங்கேறின.

ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிரை விற்பனை செய்யமுடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, கோவை மாவட்டங்களில் நடைபெற்று வந்த ரெம்டெசிவிர் விற்பனை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முதலில் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நடைபெற்றது. அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்ததால் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், அரசின் அறிவிப்பை தொடர்ந்து அங்கும் ரெம்டெசிவிர் விற்பனையானது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை அறியாமல் அங்கு வந்த பொதுமக்கள் தங்களுக்கு மருந்து வேண்டும் என்று கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சியில், முறையான அறிவிப்பு இல்லாததால் ரெம்டெசிவிர் வாங்குவதற்காக விடிய விடிய காத்திருந்த மக்கள், மருந்து கிடைக்காத விரக்தியில் கல்லூரியை முற்றுகையிட்டனர்.

தனது கணவன் மற்றும் மகனுக்காக மருந்து வாங்க காத்திருந்து, கடைசியாக மருந்து கிடைக்காததால், பெண் ஒருவர் சாலையில்  உருண்டு புரண்டு கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

கோவையில், ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதை அறியாமல் மருந்து வாங்க வந்த சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

மதுரையில், டோக்கன் வாங்கி ரெம்டெசிவிருக்காக இரண்டு நாட்களாக காத்திருந்த மக்கள், மருந்து கிடைக்காததால் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

நெல்லை, சேலம் அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் நடைபெற்று வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை அரசின் அறிவிப்பை தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

நெல்லையில் முறையான அறிவிப்பு இல்லாததால் காலையிலிருந்து டோக்கன் பெறுவதற்காக காத்திருந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சேலத்தில் டோக்கன் வாங்கியவர்களுக்கு மட்டுமாவது மருந்து விநியோகம் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments