காய்ச்சல் இருக்கிறது என்று கூறி, பெண் முன் களப்பணியாளருக்கு பாலியல் தொல்லை... 54 வயது நபர் கைது!
சென்னையில் வீடு வீடாகச் சென்று கொரோனா நோய் அறிகுறியை பரிசோதிக்கும் பெண் முன்களப் பணியாளரை, காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்த நபரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்ய களமிறக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று நோய் தோற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி இருக்கிறதா என அறிய இளம் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை ஏழுகிணறு பகுதியில் மாநகராட்சி முன்கள பணியாளராக 27 வயதான இளம் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். போர்ச்சுகீசு சர்ச் தெருவில் ஒரு குடியிருப்பில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சதக்கத்துல்லா என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சதக்கத்துல்லாவிடம் வீட்டில் யாரெல்லாம் உள்ளனர்? யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா ? என கேட்டுள்ளார் அந்த இளம்பெண். தனது மனைவிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் வீட்டிற்குள் வந்து உடல் வெப்ப நிலையை பரிசோதிக்குமாறும் சதக்கதுல்லா கூறியிருக்கிறார். இளம் பெண் உள்ளே சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொள்வதற்குள் சதக்கதுல்லா கதவை தாழிட்டுள்ளார். திடீரென இளம் பெண்ணை பின்னால் இருந்து கட்டிப் பிடித்து ஆபாசமாக நடந்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த இளம் பெண் கூச்சலிட்டு கொண்டே வெளியில் ஓடி வந்துள்ளார். சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நடந்ததை அறிந்து சதக்கத்துல்லாவை நையப்புடைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட முன் களப்பணியாளரான இளம் பெண் கொடுத்தப் புகாரில் பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.
கைதான நபருக்கு 54 வயதாகிறது. மனைவி குழந்தைகள் வேறு வீட்டில் வசிக்கிறார்கள். சம்பவம் நடந்த சதக்கத்துல்லாவுக்கு சொந்தமான இந்த வீட்டில் யாருமில்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, முன் களப்பணியாளராக பணியாற்றிய இளம் பெண் தனியாக தினமும் வந்து செல்வதை அறிந்து திட்டமிட்டு வீட்டிற்குள் அழைத்து சென்று அத்துமீறியதை ஒப்புக்கொண்டுள்ளான்.
Comments