ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழந்தைகளுக்கு ஆபத்து..!
கொரோனா பெருந்தொற்றால் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளுங்கள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது போன்ற நிலையில் உள்ள குழந்தைகள், கடத்தல் கும்பலிடம் சிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு குடும்பத்திலும் உறுதுணையாக இருந்த பலரையும் இழந்திருப்பது போல, குழந்தைகள் ஒரே நேரத்தில் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறும் அவல நிலையும் நடந்து வருகிறது. அவ்வாறான குழந்தைகளுக்கு உதவுவதாக நினைத்து பலரும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்புகின்றனர்.
சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலில் "கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள 2 வயது பெண் குழந்தையையும், 2 மாத ஆண் குழந்தையையும் யாராவது தத்தெடுத்து கொள்ளுங்கள்" என குறிப்பிட்டு உறவினர்கள் தொடர்பு எண்ணையும் பகிர்ந்துள்ளார். இதே போன்று பிறந்து மூன்றே நாளான பெண் குழந்தையும், 6 மாத குழந்தையும் கொரோனாவால் பெற்றோரை இழந்திருப்பதாகவும் நல்ல மனம் படைத்தவர்கள் தத்தெடுத்து கொள்ளுங்கள் என பல குறுஞ்செய்திகள் பரவி வருகிறது. இப்படியாக சமூக வலைதளங்களில் பகிரும் பல குறுஞ்செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் அவ்வாறான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் தீங்கு இது என எச்சரிக்கின்றனர் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள்.
ஆதரவற்ற குழந்தைகளை ஒப்படைக்க அந்தந்த மாவட்டங்களில் அரசு அமைப்புகளான குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை நல கமிட்டிகள் செயல்படுகின்றன. அல்லது 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து தெரிவித்தால், அரசு சட்டப்பூர்வமாக தத்தெடுக்க பதிவு செய்திருப்பவர்களிடம் ஒப்படைக்கும். இவற்றை தவிர்த்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அனுப்பினால், அந்த குழந்தைகளை தத்தெடுத்து கொள்வதாக அணுகும் நபர்கள் குழந்தை கடத்தல் கும்பலாகவும் இருக்கலாம் என கவலை தெரிவிக்கின்றனர்.
உண்மையில் இந்த தகவலை பகிரும் பலரும் அந்த குழந்தைகளின் நலன் கருதியே பகிர்ந்தாலும், அதன் பின்விளைவு குழந்தைகளுக்கு ஆபத்தானது என உணர வேண்டும் என்கின்றனர் காவல் துறையினர்.
அதே வேளையில் இந்த பேரிடர் காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை வைத்து ஆதரவற்ற நிலையில் குழந்தைகளை மீட்டு, அரசு பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் முன் வைத்துள்ளனர்.
Comments