என் அம்மா நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது... வைராக்கிய சீதாதேவியின் மக்கள் சேவை..!
ஆக்ஸிஜன் இல்லாமல் தன் தாய் இறந்து போன சோகத்தை வைராக்கியமாக கொண்டு "ஆக்சிஜன் இல்லாமல் யாரும் சாகக் கூடாது" என பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார் சென்னையை சேர்ந்த பெண்மணி ஒருவர்.
சென்னை மூலக்கடையை சேர்ந்த சீதா தேவி என்பவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவருடைய தாய் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே பல மணி நேரம் காத்திருந்து உயிரிழந்துவிட்டார்.
இதனால் மிகுந்த மன வேதனையுற்ற சீதா தன் தாய் போல வேறு யாரும் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் இழக்கக் கூடாது என்பதற்காக, தன்னார்வ எண்ணம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து ஆட்டோ ஒன்றில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
பகலில் மருத்துவமனைகளிலும், இரவு நேரங்களில் சென்னையின் மாத்தூர், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவசர தேவைக்காக போன் செய்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் இவர்.
தற்போது ஒரு ஆட்டோவின் மூலம் மட்டுமே இந்த பணிகளை செய்வதாகவும், பொதுமக்களிடம் இருந்து அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிசன் வசதியுடன் கூடிய இரண்டாவது ஆட்டோவையும் தயார் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் சீதா தேவி கூறினார்.
உயிரே போகும் இந்த கொரோனா காலத்திலும் ஆக்சிஜன் சிலிண்டரை 4 மடங்கு விலை வைத்து விற்கும் வியாபாரிகள் மத்தியில் தன்னிடம் இருக்கும் ஆட்டோவை பயன்படுத்தி பல உயிர்களை காத்து வரும் இதுபோன்ற சீதா தேவிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
Comments