மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர்..! முதலமைச்சர் ஆலோசனையில் முடிவு...
தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அரசின் ரெம்டெசிவிர் விற்பனை மையங்களில் மக்கள் கூட்டமாகக் கூடுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பது குறித்த புகார்களும் வந்துள்ளன. இந்நிலையில், மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த கோரிக்கைகளை இணையத்தளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
கோரிக்கைகளைப் பரிசீலித்து மருந்து ஒதுக்கீடு செய்தபின், மருத்துவமனைப் பிரதிநிதிகள் விற்பனை மையங்களுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுவதையும், அதே விலையிலேயே நோயாளிகளுக்கு விற்கப்படுவதையும் கண்காணிக்கப்படும்.
தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்துச் சீட்டு வழங்கும் மருத்துவமனைகள் மீதும், விதிமுறைகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Comments