கல்லறையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவுகள்...! எரியூட்டும் இடத்திலும் நீண்ட வரிசை
சென்னையில் ஆக்ஸிஜன் வசதி இருந்தும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் எரிவாயு தகனமேடைகள் பழுதடைந்ததால் திருவிக நகரில் உள்ள தகன மேடையில் சடலங்களை தகனம் செய்ய நீண்ட வரிசையில் கண்ணீருடன் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் நிரம்பிவிட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
ஆக்ஸிஜன் படுக்கை வசதி வேண்டி நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் காத்திருந்த நிலையில், நந்தம்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையத்திற்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து சில நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை போதிய கட்டணம் செலுத்த வசதி இல்லை என தெரிந்ததும் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதால் அவர்களுக்கு அதுவரை கிடைத்த சிகிச்சை வசதி தடையின்றி கிடைப்பதற்குள்ளாக நோயாளிகள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்னும் சில தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் பலியானதாக இருக்க கூடது என்பதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலம் அரங்கேறி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இதற்கிடையே கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்ய மின்சார தகன மேடைகள் பல பழுதானதால் நீண்டவரிசையில் கண்ணீருடன் உறவினர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை கொளத்தூர் ஜி.கே..எம் காலனி, வில்லிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மின்சார தகனமேடை பழுதாகி இருப்பதால், திருவிக நகர் மின்மயானத்தில் ஏராளமான சடலங்களுடன் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன.
இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள மயானங்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன, தூத்துக்குடியில் கொரோனாவால் இருவர் மட்டுமே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் 10 சடலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எரியூட்டப்பட்டன.
நெல்லையில் கொரோனா மரணங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கொரோனாவால் உயிரிழந்தவர்களை கூட வேறு நோய் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி உறவினர்களிடம் பாதுகாப்பாக அடக்க செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சடலங்கள் ஒப்படைக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது
நாமக்கல்லில் கடந்த 3 நாட்களில் 50 பேருக்கும் மேலாக கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால் அங்குள்ள மயான பூமிகளில் சடலங்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
கரூரிலும் தகனமேடைகளுக்காக சடலங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் அரங்கேறிவருகின்றது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் 24 மணி நேரமும் சடலங்கள் எரிந்து கொண்டே இருப்பதால் உள்ளே உறவினர்கள் தவிர்த்து வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி இருந்தாலும், ரெம்டெசிவிர் மருந்துக்காக நோயாளிகளின் உறவினர்களை ஊர் ஊராக அலைய விடுவதாகவும், சுகாதாரத்துறையினர் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால் மட்டுமே ரெம்டெசிவிர் பெறுவதற்காக முண்டியடிக்கும் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும், அங்கும் நோய்பரவலை தடுக்க முடியும் என்று நோயாளிகளின் உறவினர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் ஊரடங்கை மதித்து வீட்டில் இருந்து நோய்பரவலை கட்டுப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்தால் போதும், இது போன்ற துர்பாக்கிய நிலையில் இருந்து தமிழகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்பும்..!
Comments