அதி தீவிரப் புயலாக மாறியது டவ்-தே.. நிவாரணப் பணிகளுக்காக முப்படைகளும் தயார்நிலை..!
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. புயல் நிவாரணப் பணிகளுக்காக முப்படைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டவ்-தே புயலாக மாறியது.
இந்தப் புயல் மேலும் வலுவடைந்து நேற்று மாலை அதிதீவிர புயலாக மாறியது. இது வடக்கு, வடமேற்கே நகர்ந்து, குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
பேரிடர் மீட்புப் படையின் 53 குழுக்கள் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜாம் நகர், ராஜ்கோட் உள்ளிட்ட இடங்களில் வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக விமானப்படையின் 16 விமானங்களும், 18 ஹெலிகாப்டர்களும் தயார்நிலையில் உள்ளன.
புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையின் தென்பிராந்திய வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் கொச்சி அருகே நிவாரண முகாம்களையும் அமைத்துள்ளனர்.
இதுதவிர, மீனவர்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல்படை கப்பல்கள், படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Comments