யார் சாமி இவரு...? மரத்துக்கு மேல கொரோனா குவாரண்டைன்..! அத்தனை அறிவாளியும் இங்க தான்..!

0 11552
யார் சாமி இவரு...? மரத்துக்கு மேல கொரோனா குவாரண்டைன்..! அத்தனை அறிவாளியும் இங்க தான்..!

கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறை இல்லாததால் வீட்டின் முன்பு இருந்த உயரமான மரத்தின் மீது கட்டிலை கட்டி அதன் மீது ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர். தெலங்கானாவில் அரங்கேறியுள்ள மரத்தனிமை ஐடியா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கொடிய விலங்கிற்கு பயந்தோ, வேட்டையாடுவதற்காகவோ இவர் மரம் ஏறவில்லை..! கொரோனாவுக்காக மரத்தில் ஏறி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த வில்லேஜ் விஞ்ஞானி சிவா..!

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான சிவாவுக்கு அறிகுறிகளின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி சுகாதாரத்துறையினர் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கிச் சென்றனர்.

ஒரே ஒரு அறை கொண்ட வீடு உடன் தாய் மற்றும் சகோதரிகள் இருக்க எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்று யோசித்த சிவாவுக்கு கை கொடுத்தது வீட்டின் முன்பு ஓங்கி வளர்ந்திருந்த மரம்..!

வீட்டில் இருந்த கயிற்றுகட்டிலை எடுத்து, மரத்தின் மீது ஏற்றி பக்குவமாக மரத்துடன் சேர்த்து கட்டினார். அதன் பின்னர் கச்சிதமாக மரத்தின் மீது கட்டிலை கட்டி மேலே அமர்ந்து கொள்ளும் வகையில் படுக்கையை அமைத்துக் கொண்டார்.

அவருக்குத் தேவையான உணவு மற்றும் மாத்திரைகளை கயிறு மூலம் வீட்டில் உள்ளவர்கள் மேலே கட்டி அனுப்பி வைத்தாலும், இளம் வயது என்பதால் மின்னல் வேகத்தில் மரத்தில் இருந்து இறங்கி ஏறி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார் சிவா.

சுய தனிமைப்படுத்திக் கொள்ளுதலில் ஆளுக்கு ஒரு வசதி இருக்கும் நிலையில் வசதியே இல்லையென்றால் கூட இயற்கையோடு வாழும் முறையில் தான் வசதி இருக்கின்றது என்பதை தன்னுடைய சாமர்த்தியமான நடவடிக்கை மூலம் நிரூபித்திருக்கிறார் இளைஞர் சிவா

தனிமைப்படுத்திக் கொள்ள தனியார் மருத்துவமனைகளை தேடிச்சென்று லட்சங்களை கொட்டிக் கொடுக்கும் செல்வந்தர்கள் மத்தியில் நட்ட மரத்தையே தங்கும் வீடாக்கிய இளைஞர் சிவாவின் செயல் வரவேற்புக்குரியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments