ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுடன் சிகிச்சை..! தன்னார்வ அமைப்பினர் உருவாக்கிய கொரோனா மருத்துவமனை

0 6263
ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவுடன் சிகிச்சை..! தன்னார்வ அமைப்பினர் உருவாக்கிய கொரோனா மருத்துவமனை

ஈரோட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், தன்னார்வ அமைப்புகள், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து 110 படுக்கையுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவுடன் கொரோனா சிகிச்சையளிக்க ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈரோட்டில் தொழில் அதிபர்கள் இணைந்து நடத்தும் ”ஒளிரும் ஈரோடு” என்ற தன்னார்வு அமைப்பு, தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி உள்ளனர். இதற்காக பவானி செல்லும் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனை தன்னார்வ அமைப்பினரால் தேர்வு செய்யப்பட்டு, அந்த மருத்துவமனையில் உள்ள 40 படுக்கைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கபட்டது. இதனையறிந்து மாவட்டம் முழுவதுமுள்ள பொதுமக்கள் இந்த மருத்துவமனையை தேடி வர தொடங்கியதால், அருகேயுள்ள பள்ளியின் வகுப்பறைகளை கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறும் புதிய மருத்துவமனையாக மாற்றியுள்ளனர்.

ஏற்கனவே மருத்துவமனையில் 40 படுக்கைகள் உள்ள நிலையில், பள்ளியில் கூடுதலாக 110 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான ஊதியத்தையும் ஏற்றுக்கொண்டுள்ள தன்னார்வ அமைப்பினர், இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை மட்டுமின்றி, உணவு உள்ளிட்டவற்றையும் இலவசமாகவே வழங்குகின்றனர். இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் செலவு செய்து சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ள தன்னார்வு அமைப்புகள், பள்ளியின் இரண்டாவது தளத்தில் மேலும் 100 படுக்கை வசதியை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனாவிற்கு ஆக்ஸிஜன் சிகிச்சை வரை இந்த மருத்துவமனையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைக்கான நோயாளிகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபடுவர் என கூறியுள்ள தன்னார்வ அமைப்பினர், தங்களை பார்த்து அண்டை மாவட்டங்களில் ஒளிரும் நாமக்கல், ஒளிரும், திருச்சி, என்ற பெயரில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments