சென்னையில் ரெம்டசிவிர் மருந்து வாங்க கட்டுக்கடங்காத தள்ளுமுள்ளு...

0 30609

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர், தனிநபர் இடைவெளியின்றியும் முறையாக முகக்கவசம் அணியாமலும் குவிந்தனர். அப்போது முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் அங்கு கட்டுக்கடங்காத கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிலருக்கு, அவர்களது உடல்நிலைக்கேற்ப ரெம்டெசிவிர் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் வேளையில் ரெம்டெசிவிருக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து, நேரு ஸ்டேடியத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 9 மணிக்கு விற்பனை தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், காலை முதலே ஏராளமானோர் நேரு ஸ்டேடியம் வரத்தொடங்கினர். கேட்டை திறப்பதற்கு முன்பே, தனிநபர் இடைவெளியின்றி ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேட்டை திறந்துவிடவே, அப்போதும் வரிசையில் செல்லாமல் கூட்டமாக சென்றனர்.

ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி, சிலர் உள்ளே புகுந்து சென்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அப்போது அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு சில தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்கும் போதே, ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வரச்சொல்லி வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் மருந்து வாங்க வருவதாக கூறும் பொதுமக்கள், ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த அரசே நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இதனிடையே ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை அதிகரிக்க வலியுறுத்தி, சென்னை நேரு ஸ்டேடியம் முன் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மருந்து வாங்க காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்த நிலையில், ஏற்கனவே பதிவு செய்திருந்தவர்களுக்கும் மருந்து கிடைக்காமல் போனது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல நாட்களாக காத்திருந்து மருந்து கிடைக்காத விரக்தியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டோக்கன் முறையாக வியோகிக்கப்படவேண்டும், மருந்து கையிருப்பை அதிகரித்து, விற்பனையை முறைப்படுத்த சிறப்பு அதிகாரியை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதானம் பேசிய போலீசாரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments