ஏழைகளுக்கு ஓர் அட்சய பாத்திரம்..! பசிப்பிணி போக்கும் தொண்டு நிறுவனம்
கொரோனா ஊரடங்குக்கு மத்தியில் சென்னையில் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடும் சாலையோர ஏழை மக்களுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் தினமும் இருவேளை உணவு விநியோகித்து பசிப்பிணி போக்கி வருகிறது.
கொரோனாவின் கட்டுக்கடங்காத வேகம் ஒருபுறம்- கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மறுபுறம் என இடையில் சிக்கித் தவிக்கும் சாலையோர ஏழை மக்களின் பசிப்பிணி போக்கும் பணியில் சென்னையைச் சேர்ந்த அன்பின் பாதை என்ற தனியார் தொண்டு நிறுவனம் களமிறங்கி உள்ளது.
மனிதம் தாண்டி புனிதம் இல்லை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, அன்பின் பாதை என்ற அமைப்பை நடத்தி வருவதாக இதன் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
சாந்தோம், மெரினா, அடையார், மைலாப்பூர் உள்ளிட்ட சுமார் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேவைப்படுவோரை அடையாளம் கண்டு ஆதரவு இவர்கள், ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள்.
நாள்தோறும் மதியம் மற்றும் இரவு என இரு வேளை, சுடச்சுட உணவு வழங்கி வரும் அன்பின் பாதை பணியாளர்கள், ஏழைகளுக்கு இலவசமாக உணவு கொடுக்க விரும்புவோர் 9941642120 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு, கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதவிர, சாந்தோம் தேவாலயம் எதிரே உணவுப் பெட்டகமும், துணி பெட்டகமும் இடம் பெற்றுள்ளன.
உணவு தேடி வருவோருக்கு உணவு கிடைப்பதுடன் பெட்டகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ள பழைய துணிமணிகள், பல ஏழை- எளிய மக்களின் மானம் காக்க உதவுகிறது.
இல்லாதவர்கள் கையேந்தும் போது, இருப்பவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்வது தான் மனித நேயம் என்பதை உணர்த்தும் வகையில் செயல்படுகிறது இந்த தொண்டு நிறுவனம்...
Comments