கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2ஆயிரம் ரூபாயை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா நிவாரண நிதியாக 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா நிவாரண நிதி வாங்க ஏராளாமனோர் முண்டியடித்துக் கொண்டு திரண்டது கொரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிந்தாதிரிபேட்டையில் ஒரே இடத்தில் 4 ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. 4 கடைகளிலும் ஒரே நேரத்தில் கொரோனா நிவாரண நிதி விநியோகம் செய்யப்படுவதால் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும், பலர் முகக்கவசம் முறையாக அணியாமலும் அலட்சியமாக செயல்பட்டனர். குறைவான காலவர்களே பணியில் இருந்ததால் அவர்களால் அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் இயலவில்லை.
கோவையில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டத்திலுள்ள 1401 நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சி திருவெறும்பூரில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அவர் உணவு வழங்கினார்.
சேலம் மாவட்டத்திலுள்ள 1591 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள 10லட்சத்து12ஆயிரத்து249 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்திற்காக 202கோடியே 44லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தலா 200 பேருக்கு நிவாரணம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மழையையும் பொருட்படுத்தாமல், ரேஷன் கடை முன் காத்திருந்த பொதுமக்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நிவாரண தொகையை பெற்றுச் சென்றனர். ரேசன் கடைகள் முன் தனிநபர் இடைவெளியை பின்பற்ற ஏதுவாக, வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. பனங்குடி நியாய விலைக்கடையில் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவும், சபாநாயகருமான அப்பாவு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு 2ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தில் 728 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 3லட்சத்து76ஆயிரத்து523 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 75 கோடியே 30லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Comments