கடுமையாகும் ஊரடங்கு..! கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கில் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
அதன்படி, மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் கடைகள் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை மட்டுமே இயங்கும். ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நேரம் தற்போது 10 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் இறைச்சி விற்பனை காலை 6 மணி முதல் 10மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மேற்கூறிய கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக டீக்கடைகள் இயங்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்கவும் அனுமதி இல்லை. மின் வணிக நிறுவனங்கள் பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அதேசமயம், ஏ.டி.எம். இயந்திரங்கள், பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும். ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக அதிக தூரம் பயணிப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளையும், மே 23ந் தேதியும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்குறிப்பிட்ட தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை கடைபிடிக்கபட்டு வந்த இரவு நேர ஊரடங்கும் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
வருகிற 17-ந் தேதி முதல் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல விரும்புவோர் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ததற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எந்த விதமான தடையும் இன்றி மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்கலாம்.
மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாகும்.
கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
Comments