உருவாகிறது புயல்..! வருகிறது கனமழை

0 4481
24 மணி நேரத்தில் உருவாகிறது புயல்..! -வானிலை ஆய்வு மையம் தகவல்

ரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக உருமாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென் கிழக்கு அரப்பிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறியதில் இருந்து 12 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று புயலாக உருமாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளையும், நாளை மறு நாளும் மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடகா கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரையிலான வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.

சூறாவளிக்காற்று புயல் காற்றாக வலுவடைந்து மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

புயல் உருவாவதின் எதிரொலியாக, 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி,மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய அதிகன மழையும், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளைய தினம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16, 17, 18 ஆகிய தேதிகளில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். சென்னையில் 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் குழித்துறையில் 11 செண்டி மீட்டர்மழையும், பேச்சிபாறையில் 9 செண்டி மீட்டர் மழையும், தக்கலையில் 8 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

புயல் எச்சரிக்கை எதிரொலியாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி துறைமுகங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பி வரும் நிலையில், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments