'செலவுக்கு அலுவலகத்தில் முன்பணம்பெற்றுக் கொள்வேன்'- ஒரு மாத சம்பளத்தை வழங்கி முதல்வரை நெகிழ செய்த காவலாளி

0 12803
ஸ்டாலின் அளித்த புத்தகத்துடன் தங்கத்துரை

தனியார் பாதுகாப்பு நிறுனத்தில் பணிபுரியும் காவலாளி ஒருவர் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அரசுக்கும் அதிகளவில் நிதி தேவைப்படுகிறது.

இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். தனியார் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். சமூக அக்கறை கொண்ட சிறுவர்கள் பலரும் தங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கி மக்களின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் , சென்னை சாலிகிராமத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றிவரும் காவலாளி தங்கதுரை, தனது ஒரு மாத ஊதியமான 10 ஆயிரத்து 101 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வழங்கினார். தங்கதுரையின் பொதுநலத்தை பாராட்டும் விதமாக அவருக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய திருக்குறள் கலைஞர் உரை புத்தகத்தில் தன் கையொப்பமிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரைக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும்.திருமணம் முடித்து கொடுத்துவிட்டதாகவும் சென்னையில் தான் மட்டுமே தங்கி வேலை பார்ப்பதாக கூறினார்.நாள்தோறும் கொரோனா தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருவதை ஊடகங்களில் பார்த்து மிகவும் வருந்தியதாகவும், அதனால் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என கருதி ஒரு மாத ஊதியத்தை வழங்கியதாக தெரிவித்தார்.

மாத ஊதியத்தை வழங்கிவிட்டதால் இனி செலவுக்கு என்ன செய்வீர்கள் என கேட்டதற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியதில் மன நிறைவு உள்ளதாகவும், செலவுக்கு அலுவலகத்தில் முன் பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பதிலளித்தார்.

பெயரில் மட்டுமல்ல குணத்திலும் தங்கம்தான் என்று தங்கதுரையை சுற்றிருந்தவர்கள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments