ஆம்புலன்ஸ்களாக மாற்றப்படும் கார்கள்... தட்டுப்பாட்டை தவிர்க்க மாற்று யோசனை

0 4218

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கொரோனாவின் கோரதாண்டவத்தை, இரவு, பகலாக ஓயாமல் சாலைகளில் கேட்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் ஒலி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட இடங்களில் நோயாளிகளுடன் மருத்துவமனை வளாகத்திலேயே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அவ்வாறு காத்திருக்கும் பல நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் அவரச உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சூழலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறது தமிழக சுதந்திர வாடகை வாகன சங்கம். இதற்காக, தங்களது கால் டாக்ஸிகளை ஆம்புலன்ஸாக மாற்றி வருகின்றனர்.

முதற்கட்டமாக ஸ்வோட் (SWOTT) கோவிட் ரிலீஃப் ஃபோர்ஸ் (Covid Relief force) ஆகிய தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இரண்டு கார்களை மட்டும் ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளனர். பின்பக்க இருக்கைகளை அகற்றிவிட்டு ஓட்டுநருக்கும் பின் பகுதிக்கும் இடையே திரைச்சீலை வைத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. காரின் பிற்பகுதியில் ஸ்ட்ரெச்சர், உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இணைத்து ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளனர்.

ஷைலோ, டவேரா, இன்னோவா, டெம்போ டிராவல்லர் போன்ற பெரிய வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்ற ஸ்ட்ரெச்சர், ஆக்சிஜன் போன்றவற்றிற்கு ஒரு வாகனத்திற்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது எனவும், இந்த தொகையை அரசே வழங்க முன் வந்தால் தமிழகம் முழுவதும் 1300 வாகனங்களை ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றி உடனே அவசர தேவைக்கு பயன்படுத்தலாம் என்ற யோசனையை கூறியுள்ளனர்.

இதன் மூலம் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் சிரமப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்து, உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments