அமைச்சர்களுக்கே அட்வைஸ்ன்னா... அல்லக்கைகளுக்கு ஆப்பு தான்..! அரசு ஆஸ்பத்திரியில் அலப்பறை
அமைச்சர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் காவல்துறை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்ற சூழலில், சபாரி போட்ட பேர்வழி ஒருவர், அமைச்சருக்காக தேர்தல் வேலை செய்ததாகக் கூறி குறுக்கு வழியில் ரெம்டெசிவர் மருந்து பெற முயன்று வசமாக சிக்கி உள்ளார்.
மன்னன் படத்தில் பிளாக்கில் சினிமா டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் கூட்டத்தை முந்திச்சென்று ரஜினியும், கவுண்டமணியும் செய்யும் மிரட்டல் சேட்டைகளை மிஞ்சும் வகையில் திருச்சி மருத்துவமனையில் ஒரு அட்ராசிட்டி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருச்சி இயன்முறை மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் சபாரி போட்ட சவடால் பேர்வழி ஒருவர், தனது கையாளுடன் உள்ளே புகுந்தார்.
300 பேர் காத்திருந்தாலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது.
ஆனால் டோக்கன் ஏதும் இல்லாமல் சபாரி ஆசாமி தன்னை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் என்று கூறி போலீஸ் ஒத்துழைப்புடன் உள்ளே சென்றதாக கூறப்படுகின்றது.
அந்த நபரிடம் மருந்து பெற்றுச் செல்வதற்கான எந்த ஆவணமும் முறையாக இல்லை, மருத்துவர் சீட்டில் மருத்துவர் கையொப்பம் இல்லை, பதிவு எண் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மருந்து வழங்க அங்குள்ளவர்கள் மறுத்துள்ளனர்.
இதையடுத்து தங்கள் செல்போனில் சில பிரபலங்களுக்கு போன் செய்து கொடுத்து மருந்து தரச்சொல்லி நிர்பந்தித்துள்ளனர். அங்கு வந்த மருத்துவமனை துணை முதல்வர் ஹர்ஷிதா பேகத்திடமும் விசாரித்துள்ளார்.
அவரிடம் தனக்கு, அந்த எம்.எல்.ஏவை தெரியும், இந்த அமைச்சரை தெரியும் என்று அளந்து விட்டுள்ளார் சபாரி போட்ட சவடால் பேர்வழி குழந்தைவேலு..!
அவரது இடையூரால் காத்திருந்த மற்றவர்களுக்கு மருந்து வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைதட்டிக் கேட்டவர்களையும் மிரட்டி வம்புக்கு சென்ற அந்த சபாரி ஆசாமியின் அலப்பறை நீண்ட நேரம் நீடித்தது..!
ஒரு கட்டத்தில் தான் அமைச்சருக்கு தேர்தல் வேலை செய்தவன் என சவுண்டு விட்ட சபாரி பார்ட்டி தனது தம்பி மனைவிக்காக மருந்து வாங்க வந்ததாக கூறி சமாளித்ததோடு, குறுக்கு வழியில் மருந்து பெற்றுச்செல்ல முயன்றார்.
ஆனால் முறையான ஆவணமில்லாததால் மருந்து வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அமைச்சர்களோ, அமைச்சர்களின் உதவியாளர்களோ காவல் நிலையங்களுக்கு பேசி போலீசாருக்கு இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அத்துமீறினால் பதவி பறிக்கப்படும் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், சாலை போடும் பணிக்காக இயக்கப்பட்ட லாரிகளை மறித்து பிரச்சனை செய்த திமுகவினரிடம், வீடியோ எடுத்து முதல் அமைச்சர் பார்வைக்கு அனுப்ப போவதாக போலீசார் எச்சரித்ததும் சம்பந்தப்பட்ட திமுகவினர் ஓட்டம் பிடித்தனர்.
அதே போல ஊரடங்கை மதிக்காமல் போலீசுக்கு சவால் விட்ட உற்சாக தொண்டர் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் உயிர்காக்கும் ரெம் டெசிவர் மருந்தை குறுக்கு வழியில் பெற்றுச்சென்று பிளாக்கில் விற்கும் திட்டத்துடன் அமைச்சர் பெயரை கூறிக் கொண்டு வந்த சபாரி சவடால் ஆசாமியை பிடித்து விசாரிக்க வேண்டும் என்கின்றனர் ரெம்டெசிவருக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நோயாளியின் உறவினர்கள்..!
கொரோனா நோயாளிகளின் நன்மை கருதி தமிழக அரசு முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் விநியோகத்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு இடையூராக இருக்கும் இடைத்தரகர்கள் ஓய்வு பெற்ற காவல்துறையினராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்க கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments