ஆம்னி பஸ்ஸெல்லாம் ஹவுஸ் புல் தான் ஆபருக்காக அத்துமீறல்..!
சென்னை மற்றும் கோவையில் இருந்து அளவுக்கதிகமான வட மாநிலப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சட்ட விரோதமாக ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்வதாக ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாலை வரி மற்றும் வங்கி தவணைத் தொகைக்காக ஓட்டுனர்கள் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
கடந்த முறை போல நடந்து செல்லாமல் சற்று புத்திசாலித்தனமாக புரோக்கர்கள் மூலமாக ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் 32 படுக்கைகள் கொண்ட ஆம்னி பேருந்தில் ஒரு நபருக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் பெற்றுக் கொண்டு 120 பேருக்கு மேல் நெருக்கி அடித்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை தாம்பரம் மற்றும் கோவையில் இருந்து தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் புறப்பட்டுள்ளன.
சீட் கணக்குப்படி உரிமையாளரிடம் வாடகையை கொடுக்கும் புரோக்கர்கள் அதை விட 3 மடங்கு லாபத்துக்கு பயணிகளை ஏற்றுவதை வாடிக்கையாக்கியுள்ளனர்.
சுமார் 2500 கிலோ மீட்டர் தூரத்தை நின்று கொண்டே பயணிக்கும் துர்பாக்கிய நிலையிலும் சிலர் இந்த பேருந்தில் ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கொரோனாவை பரப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக சாலை வரி மற்றும் பேருந்துக்கு வாங்கிய கடன் தவணை தொகைக்காகவும் பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்தை விதியை மீறி இயக்குவதற்கு, தங்களை நிர்பந்திப்பதாக ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு ஒரு பேருந்துக்கு இவ்வளவு கமிஷன் என புரோக்கர்கள் வழங்கி விடுவதால் அவர்களும் இந்த விதிமீறலைக் கண்டு கொள்வதில்லை என்று கூறுகின்றனர்
கடந்த மாதம் சென்ற சில தனியார் பேருந்து ஓட்டுனர்களே இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில், புரோக்கர்களின் பேராசைக்கு ஓட்டுனர்கள் பலியாகும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மொழி தெரியாத ஊரில் சிக்கி தவிக்கப் போகிறோம் என்று தெரிந்தே செல்வதாக கவலையை பகிர்ந்துள்ளனர்.
வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை கண்காணித்து முறைப்படுத்த தவறினால், இன்னும் சில வாரங்களில் தங்களை மீட்க உதவுங்கள் என்ற கண்ணீர் குரல் வட மாநிலங்களில் இருந்து தமிழக ஓட்டுனர்களின் குரலாக ஒலிக்கும் என்பதே கசப்பான உண்மை.
Comments