நிரம்பும் மருத்துவமனைகள்.. ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்

0 15648

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காததால், ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளிகள் சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் காத்திருந்த 2 நோயாளிகள் உயிரிழந்த சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இதனால், கொரோனா நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகளுக்கு அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே போல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா நோயாளிகளை அங்கு அழைத்து வரும் நிலை தொடர்கிறது.

ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் விரைவாக அழைத்து வரப்பட்டாலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வாயில் முன்பு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலை ஏழு மணி முதல் ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுடன் வரும் நிலையில் பிற்பகலை கடந்தும் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிருக்கு போராடியபடி ஆபத்தான நிலையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படியாக காலை முதல் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனை வளாகத்திலும், வெளியேயும் நோயாளிகள் காத்திருக்கின்றனர். காலையில் இருந்து மணிக்கணக்காக காத்திருந்தாலுமே படுக்கைகள் கிடைப்பதில்லை எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளி, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றாலோ அல்லது இறந்துவிட்டாலோ தான், வெளியே காத்திருக்கும் நோயாளிக்கு படுக்கை கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொரோனாவின் கோரதாண்டவத்தை கண்முன்னே நிறுத்துகிறது.

மருத்துவமனை வாசலில் 10 மணி நேரத்திற்கு மேலாக படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸில் காத்திருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆம்புலன்ஸில் காத்திருந்த நோயாளி ஒருவர் மூச்சுவிட முடியாமல் உயிருக்கு போராடும் காட்சிகள் காண்போரை உருக்குலைய வைத்தது.

ஆம்புலன்ஸில் பொருத்தபட்டிருக்கும் சிலிண்டர் 14 முதல் 16 லிட்டர் ஆக்சிஜனை மட்டுமே சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. நோயாளி ஒருவருக்கு சுமார் 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே அந்த ஆக்சிஜனை செலுத்த முடியும். இதனிடையே மருத்துவமனையில படுக்கை இல்லை என்றாலும் சில மருத்துவர்கள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு அங்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். நிலைமை இப்படி மோசமாகி வருவதால் பொதுமக்கள் அனைவரும் ஆபத்தை உணர்ந்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி, முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடித்து தங்களை தற்காத்து கொள்வதே சிறந்தது...

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் ஆம்புலன்சுகள் காத்திருந்தன. முன்னதாக மருத்துவமனையில் இருந்த 500 கொரோனா படுக்கைகளும் நிரம்பியதால், வளாகத்திலேயே பெரிய அளவிலான 3 கூடாரங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கூடாரத்திலும் 20-25 பேர் வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவைகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் கூடாரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் படுக்கைகள் கிடைக்காமல் மருத்துவமனைக்கு வெளியில், ஆக்ஸிஜன் பொருத்தப்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments