சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது..! தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
தமிழக சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ந்தேதி தேர்தல் நடைபெற்று, கடந்த 2ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 33 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையின் முதலாவது கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் 3வது தளத்தில் நடைபெறுகிறது. அப்போது தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு மு.அப்பாவுவும், துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் தேர்வாகியுள்ளனர். அ.தி.மு.க.வில் 66 பேரும், காங்கிரசில் 18 பேரும், பா.ம.க.வில் 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பா.ஜ.க. சார்பில் தலா 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தலா 2 பேரும் சட்டப்பேரவைக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
Comments