சில்வர் பிளேட்ட வெளியில் வச்சி அலட்சிய ஆபரேசன்..! திருப்பூர் GH திருவிளையாடல்
இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி தோள்பட்டை எலும்பு முறிவுக்குள்ளான இளைஞருக்கு சில்வர் பிளேட்டை வெளியில் தெரியும் அளவுக்கு வைத்து அலட்சியமாக தையல் போடப்பட்ட சம்பவம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணி. பனியன் நிறுவன தொழிலாளியான இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணி முடிந்து தனது இரு சக்கரவாகனத்தில் வீடு திரும்பிய போது தவறி விழுந்தார்.
இதில் மணியின் இடது பக்க தோள்பட்டை எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மணியின் இடது பக்க தோள்பட்டை எலும்புடன் சில்வர் பிளேட் பொருத்தப்பட்டது.
அப்போது அவருக்கு தையலிட்ட மருத்துவர் சில்வர் பிளேட்டை சரியாக சேர்த்து மறைக்க தவறிவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் வெளியில் வைத்து தைக்கப்பட்டது போல சில்வர் பிளேட் வெளியில் தெரிய ஆரம்பித்தது.
தொடர்ந்து தையலிடப்பட்ட பகுதி காயம் சரியாகாததால், ஆறாத ரணத்தால், மணி வலியால் துடித்துள்ளார். மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு நடந்த அலட்சியம் குறித்து புகார் கூறியுள்ளார்.
தற்போது 2 வது முறையாக அதே திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும் சில்வர் பிளேட்டை மறைப்பதற்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ள நிலையில் காயத்தை சரிசெய்ய விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார் மணி..!
Comments