இருவாரக்கால ஊரடங்கு தமிழகத்தில் தொடங்கியது...
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இருவாரக் கால முழு ஊரடங்கு தொடங்கியுள்ளது. காய்கறிகள், பழங்கள், இறைச்சி மீன் விற்கும் கடைகள், மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் நண்பகல் வரை கடைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதால் சென்னை அண்ணாசாலையில் அதிக அளவில் வாகனங்கள் இயங்கின.
இன்றியமையாத் தேவைகளுக்காக மட்டும் மக்கள் செல்லலாம் என அரசு அறிவுறுத்தியதை மீறி ஒருசிலர் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்தனர்.
விதிகளை மீறிச் சாலையில் வாகனங்களில் செல்வோர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கலாம் என்றும், வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
திருவல்லிக்கேணி ஜாம்பஜார் சந்தையில் காய்கறி, பழங்கள் விற்கும் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் நண்பகல் வரை திறந்திருந்தன. மக்கள் பதற்றம் இன்றிச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
சென்னை கொத்தவால் சாவடி சந்தை வழக்கமான அளவுக்கு மக்கள் வரத்து இல்லாததால் ஆரவாரமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மொத்த விற்பனை மளிகைக் கடைகளும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
காஞ்சிபுரத்தில் காய்கறிக் கடைகள் மளிகைக் கடைகள், மருந்தகங்கள் ஆகியவை நண்பகல் வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டன. உணவகங்களில் உணவைப் பொட்டலமாக வழங்க அனுமதிக்கப்பட்டது.
மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், வாடகைக் கார், ஆட்டோ ஆகியவை இயங்காததால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
முழு ஊரடங்கையொட்டிப் பேருந்துகள் இயக்கப்படாததால் சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகியவை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அஸ்தம்பட்டி, கோட்டை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வாகனப் போக்குவரத்து இன்றிக் காணப்பட்டன. சாலைச் சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து இன்றியமையாப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
முழு ஊரடங்கின் போது அம்மா உணவகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வழக்கம்போல் வந்து உணவருந்திச் சென்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தடையை மீறிக் கடைகளைத் திறந்தவர்களுக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கையொட்டி மாவட்டங்கள் இடையான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் - ஈரோடு மாவட்டங்களின் எல்லையான குமாரபாளையத்தில் காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறிச் சாலைகளில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் சென்றோரைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.
தஞ்சாவூரில் முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய நகரங்களில் இன்றியமையாப் பொருட்கள் விற்பனைக் கடைகள் நண்பகல் வரை திறந்திருந்தன. மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.
கடலூர் பேருந்து நிலையம், லாரன்ஸ் சாலை, பாரதி சாலை ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து இல்லை. இருசக்கர வாகனங்களில் தேவையின்றிச் சென்றவர்களைக் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
விழுப்புரத்தில் மளிகைக் கடைகள், காய்கறி, பழக்கடைகள் மட்டும் நண்பகல் வரை திறந்திருந்தன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்தவர்களைக் காவல்துறையினர் எச்சரித்துத் திருப்பி அனுப்பினர்.
திண்டிவனம் மேம்பாலத்தில் 4 பாதைகளும் தடுப்புகளைக் கொண்டு அடைக்கப்பட்டன. சென்னையையும் தென்மாவட்டங்களையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருநெல்வேலி நகரம், சந்திப்பு, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோர் அடையாள அட்டையைக் காட்டிய பின்னரே செல்ல அனுமதித்தனர்.
தூத்துக்குடியில் முழு ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இன்றியமையாப் பொருட்கள் விற்பனைக் கடைகள் நண்பகல் வரை திறக்க அனுமதிக்கப்பட்டன.
மற்ற கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்வோர் அடையாள அட்டையைக் காட்டியபின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் முழு ஊரடங்கையொட்டிப் பேருந்துகள் இயங்காததால் காய்கறி, பழச்சந்தை புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நண்பகல் வரை திறந்திருந்த சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.
ராமேஸ்வரத்தில் சாலைகள், பேருந்து நிலையம் ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பலசரக்குக் கடைகள், காய்கறிக் கடைகள், தேநீக் கடைகள் ஆகியன நண்பகல் வரை செயல்பட்டன.
முழு ஊரடங்கையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளை அமைத்து ஆயிரத்து 100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனியில் முழு ஊரடங்கை பொருட்படுத்ததாத மக்கள் வழக்கம்போல் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
முழு ஊரடங்கு காரணமாக திருப்பூரில் 50 சதவீத ஊழியர்களுடன் பனியன் கம்பெனிகள் இயங்கி வருகின்றன.
சென்னை சைதாப்பேட்டை சந்தையில் மருந்துகடைகள் மற்றும் உணவகங்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வருகின்றன.
முழு ஊரடங்கு நேர கட்டுப்பாட்டு காரணமாக சென்னையில் திறக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் மளிகை கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியுடன் அடைக்கப்பட்டன.
தஞ்சாவூரில் மளிகைக் கடைகள் காய்கறி, பழம், பூ விற்கும் கடைகள் நண்பகல் வரை திறக்கப்பட்டு வணிகம் நடைபெற்றது. மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
முழு ஊரடங்கால் திருச்சி மாவட்டத்தில் 940 அரசு பேருந்துகளும், 320 தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
திருச்சி நகரின் முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூரில் வாகனங்கள் இயக்கப்படாததால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. சந்தைகள், காய்கறிக் கடைகள் நண்பகல் வரை திறந்திருந்ததால் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
தேவையின்றி வாகனங்களில் செல்வோருக்கும், முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்குக்கு மத்தியில், திருப்பூர் அம்மாபாளையம் சோதனைசாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், கட்டுப்பாடுகளை மீறிதேவை இல்லாமல் ஊர் சுற்றிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர உரிமையாளர்கள்
மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, பகல் 12- மணிக்கு மேல் வெளியே நடமாடியவர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வாகனங்களில் வலம் வந்தோருக்கு அபராதம் விதித்தனர்.
காஞ்சிபுரத்தில் பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட பிறகு சாலைகளில் தேவை இல்லாமல் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்
Comments