கொரோனாவால் நடிகர் பாண்டு உயிரிழப்பு
தமிழ் திரையுலகில், காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்த பாண்டு காலமானார். பெருந்தொற்று பாதிப்பால் உயிரிழந்த பாண்டுவிற்கு, திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பாண்டு, காஞ்சனா 2, அன்பானவன் அசாரதவன் அடங்காதவன், மொட்ட சிவா கெட்ட சிவா, இப்படை வெல்லும், சிங்கம், உத்தம புத்திரன், போக்கிரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார்.
நடிப்பில் மட்டுமல்லாது ஓவியத்திலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்த பாண்டு, அதிமுகவின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தவர் என்று கூறப்படுகிறது.
வித்தியாசமான எக்ஸ்பிரஷனாலும், அசாதாரண நகைச்சுவையாலும் ரசிகர்களை சிரிக்கவைத்த நடிகர் பாண்டு. 200க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பாண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.
அவருடைய உடல் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டது. பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல்கள் எரியூட்டப்படுவதற்காக காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாண்டுவின் உடல் எரியூட்டப்பட்டது.
Comments