தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு? ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளன? -உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, செயல்படாமல் இருப்பதில் எத்தனை மையங்களை செயல்படுத்த முடியும் என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட்டில் ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் திறன் இருந்த போதிலும் 2003 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் செங்கல்பட்டு பகுதியில் இயங்கும் மத்திய அரசுக்கு சொந்தமான HLL பயோடெக் நிறுவனம், 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரித்து வருவதால், அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிப்பை மேற்கொள்ளவும் உரிய உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 13 நோயாளிகள் மரணமடைந்த விவகாரத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எந்த அளவு உள்ளது, தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் மையங்களில் எத்தனை மையங்களை உடனடியாக செயல்படுத்த முடியும், அதனை செயல்படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்றும் நீதிபதிகள் வினவினர். செங்கல்பட்டு உள்ள HLL பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பின.
இது தொடர்பாக திருச்சி பெல் நிறுவனம், செங்கல்பட்டு HLL பயோடெக் நிறுவனம் மற்றும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Comments