சிடி ஸ்கேன் பரிசோதனை யாரெல்லாம் எடுக்க வேண்டும், தவிர்க்க வேண்டும் - மருத்துவர்கள் விளக்கம்
கொரோனா தொற்றை உறுதிப்படுத்த சிடி ஸ்கேன் எடுப்பது அதிகரித்துள்ள நிலையில், யாரெல்லாம் எடுக்க வேண்டும், யாரெல்லாம் தவிர்க்க வேண்டும், எப்போது சிடிஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. அதில் குழப்பமான முடிவு ஏற்படும் பட்சத்தில் சிடி ஸ்கேன் செய்ய மருத்துவமனைகள் பரிந்துரைக்கின்றன. ஆனாலும், பொதுமக்களில் சிலர் சிடி ஸ்கேன் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு சி டி ஸ்கேன் எடுப்பது சுமார் 300 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் என்றும் சி டி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா பேசிய கருத்து காட்டுத்தீபோல் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், யாரெல்லாம் சிடி ஸ்கேன் எடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
அதன்படி, கொரோனா அறிகுறி ஏற்பட்ட 5வது நாளில் இருந்து 7வது நாளுக்குள் எடுக்கலாம். அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் எடுக்கலாம். 5 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்து தற்போது எந்த பிரச்சனையும் இல்லை என்றால் சிடி ஸ்கேன் எடுக்க தேவையில்லை.
சிடி ஸ்கேனில் தொற்று உறுதி செய்யப்பட்டு 10, 14 நாட்களுக்குப் பின்னர் நலமாக இருப்பதாக உணர்ந்தால் மீண்டும் சிடி ஸ்கேன் எடுக்க தேவையில்லை.
உறவினருக்கு தொற்று ஏற்பட்டதற்காகவோ, தெரிந்த நபருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதற்காகவோ, கொரோனா அறிகுறியில்லை என்றால் சிடி ஸ்கேன் எடுக்க தேவையில்லை.
அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனையே போதுமானது என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர். அதே சமயம் நோயாளிக்கு தொடர்ந்து இருமல், மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறி இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கின்றனர்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த போதிலும், தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் நுரையீரல் பாதிப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பதை அறிவதற்காக முக்கியமாக சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும். பெற்றோருக்கு தொற்று இருந்தாலும், குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க தேவையில்லை.
சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்று நோய் வரும் என்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் உரிய ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள் தற்போதைய நவீன உலகில் சிடி ஸ்கேன் எந்திரம் வெளியிடும் கதிர்வீச்சு குறைந்த அளவே உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
அதிக உயரத்தில் போயிங் விமானத்தில் 10 மணி நேரம் பயணிக்கும் போது ஏற்படும் அளவுக்கு இணையான குறைந்த அளவு கதிர்வீச்சே ஏற்படும் என்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments