பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்
கொரோனா தொற்றால் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 74
நடிகர், நகைச்சுவைப் பேச்சாளர், தொழிலதிபர், ஓவியர் என தளங்களில் இயங்கிய பாண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தொற்று உறுதியானவுடன் நடிகர் பாண்டுவும், அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததில் பாண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏழையின் சிரிப்பிலே, சந்தித்தவேளை படங்களில் நடிகர் பாண்டு ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளார்.
பல்வேறு திரைப்பிரபங்களும் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகிவரும் சூழலில், தற்போது அதில் சிக்கியது அனைவரையும் சிரிக்க வைத்து அழகுபார்த்த நடிகர் பாண்டு. இவரது மறைவுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் நடிகர் பாண்டு மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை இருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பழகுவதற்கு இனிய பண்பாளரான அன்புச் சகோதரர் நடிகர் பாண்டுவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டுமென்றும், பாண்டுவின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு கொரோனாவால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்ற நடிகர் பாண்டு மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments