தமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அமல்..!
தமிழ்நாட்டில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன், மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் நாளை, வியாழக்கிழமை முதல் அமலாகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள், இறைச்சி கடைகள், தேநீர் கடைகள், 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். உணவங்கள் நீங்கலாக, மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஒருநாள் முழு ஊரடங்கு ஆகியவைத் தொடரும். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே, அதாவது, இருவர் அமரும் இருக்கைகளில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க வேண்டும்.
மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் மட்டும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மற்ற கடைகள் அனைத்தை மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி கடைகளைத் திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
மெடிக்கல் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மருந்தகங்கள், பால் விநியோக கடைகள் தொடர்ந்து செயல்படலாம். அனைத்து உணகவங்களிலும், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தியேட்டர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. உள் அரங்கங்கள், மற்றும் திறந்த வெளிகளில், அரசியல், சமுதாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள், ஊர்வலங்களில், 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் மட்டுமே சலூன்கள், பியூட்டி பார்லர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரகப் பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், சலூன்கள், பியூட்டி பார்லர்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள், கேஸ் நிரப்பும் நிலையங்கள் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்படலாம். ஊடகம், பத்திரிக்கைத்துறையினர், 24 மணி நேரமும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், தொடர்ந்து செயல்பட வேண்டிய நிறுவனங்கள், உள்ளிட்ட தொழிற்சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம். இவற்றில் பணிபுரிவோர், அடையாள அட்டையை காண்பித்து, பணிக்குச் சென்று வரலாம்.
ஏற்கனவே ஆணையிட்டவாறு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி, மீன் விற்பனை கடைகள் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். மற்ற நாட்களில், இறைச்சி, மீன் விற்பனை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
வீட்டை விட்டு வெளியில் வராமல், தனித்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது, கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சுற்றினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
Comments