ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..!
சட்டமன்ற திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதை அடுத்து, ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுநாள் காலை ஒன்பது மணி அளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 125 தொகுதிகளிலும், கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 8 பேரும் என 133 பேர் எம்எல்ஏக்கள் ஆகினர். இதையடுத்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து காலையில் தனது வீட்டில் இருந்து திமுக மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார்.
தொடர்ந்து இன்று காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு ஸ்டாலின் உரிமை கோரினார். அப்போது திமுக மற்றும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் என மொத்தம் 133 எம்எல்ஏக்களின் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கேஎன் நேரு, அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆகியோரும் இருந்தனர்.
முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினுக்கு,ஆளுநர் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பதவி ஏற்பு விழாவை எப்படி எளிமையாக நடத்தலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர் எஸ் பாரதி, முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்கும் போதே, அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்று கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிற்பகலில், மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் அனந்தராவ் பட்டேல் சந்தித்தார். அப்போது ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் கடிதத்தை அவர் வழங்கினார்.
இதனிடையே வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற இருப்பதாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அழைப்பிதழில் தெரிவித்துள்ளார். பதவி ஏற்பு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.
Comments