வழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..! ஆட்டோ சங்கர் பாணியில் திகில்

0 40400
வழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..! ஆட்டோ சங்கர் பாணியில் திகில்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், வழக்கறிஞர் வீட்டுக்குள் ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகளுக்கு யோகா சொல்லிக் கொடுத்த ஆசிரியை மீது மலர்ந்த காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆறுமுகம் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனையை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். பசும்பொன் தெருவில் கணவரை பிரிந்து வசித்து வந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையிடம் ஹரிகிருஷ்ணனின் மகள் யோகா கற்று வந்தார்.

தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமானார்.

தனது மகள் சித்ராதேவி காணாமல் போனதாக தந்தை கண்ணையா திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 05-ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர். வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் பேசிய போன் ஆடியோவை போலீசாருக்கு கொடுத்த கண்ணையா, தனது மகளை, வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கொலை செய்து இருக்கலாம் என திருமங்கலம் துணைகண்காணிப்பாளர் வினோதினியிடம் மற்றும் மதுரை காவல் ஆணையருக்கும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர். வீட்டில் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதிவைத்த கடிதத்தையயும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து பாத்ரூமில் புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும், சித்ராதேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்டில் இருப்பதாகவும், அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யோகா ஆசிரியை சித்ராதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவர்களுக்குள் நடத்தை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கைகலப்பு நடந்துள்ளது. அந்த ஆத்திரத்தில் ஹரி கிருஷ்ணனிடம் பேசாமல் இருந்துள்ளார் சித்ராதேவி.

தனது கணவர் மீண்டும் தன்னுடன் வாழ விரும்புவதாக கொரியரில் சேலை பரிசு அனுப்பி தூதுவிடுவதாக கூறிய சித்ராதேவியை, கெஞ்சிக் கூத்தாடி வீட்டிற்கு வரவழைத்து அடித்து கொலை செய்து தனது வீட்டின் குளியலறையில் புதைத்தது ஆடியோ ஆதாரத்தின் மூலம் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இதற்கிடையே காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தனது மகள் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியதுடன், தங்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் ஆட்டோசங்கர் பாணியில் பெண்ணை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்து சிமெண்டு வைத்து பூசிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments