அண்ணா அறிவாலயத்தில்.. மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!
இன்று மாலை நடக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அது குறித்த முக்கிய ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக மட்டுமே 125 இடங்களில் வென்று ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மையை விட அதிக இடங்களை வென்றுள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும் சேர்த்தால் இது 133 ஆக உயரும். இதை அடுத்து இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஏகமனதாக தேர்வு செய்யப்படுகிறார். அதற்கு முன்னோடியாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு உள்ளிட்டோருடன் அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இன்று மாலை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து எம்எல்ஏக்கள் பட்டியல் மற்றும் தாம் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஸ்டாலின் அளிக்கிறார். அதன் பின்னர் ஆளுநர் அவரை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுப்பார்.
வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால், கிண்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய நிகழ்ச்சியில் முக ஸ்டாலினும் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள்.
Comments