ரஷ்யாவில் இருந்து ஐதராபாத் வந்தடைந்தது ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து
ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றி வந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.
ரஷ்யாவின் காமாலேயா நிறுவனம் கண்டுபிடித்த ஸ்புட்னிக் தடுப்பு மருந்து 90 விழுக்காடு செயல்திறன் மிக்கது என முதல் இருகட்டச் சோதனைகளில் தெரியவந்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்த மருந்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் டோஸ்கள் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஐதராபாத் விமான நிலையத்துக்குச் சனி மாலை வந்தடைந்தது.
மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இமாச்சலத்தின் கசாலியில் உள்ள மத்திய மருந்துகள் பகுப்பாய்வகத்தில் ஒப்புதலைப் பெற்றபின் இந்த மருந்தை மத்திய மாநில அரசுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விற்கத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் டோஸ்கள் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 30 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் மருந்துகள் கொண்டுவரப்பட உள்ளது. ஜூன் மாதம் 50 லட்சம் டோஸ்களும், ஜூலை மாதத்தில் ஒரு கோடி டோஸ்களும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments