கே.வி.ஆனந்த் மறைவு திரையுலகினர் இரங்கல்

0 5769

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த, பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 54.

பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவங்கிய கே.வி.ஆனந்த், 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத்து படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் வென்றார்.

அதற்கு பிறகு, தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

2005-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அடுத்தடுத்து அவரது இயக்கத்தில் வெளியான அயன், கோ, மாற்றன், அனேகன் உள்ளிட்ட படங்கள் கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது. இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கே.வி.ஆனந்த் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் அதிகாலை 3 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கே.வி.ஆனந்த் உடல் மியாட் மருத்துவனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அவர்கள் அஞ்சலி செலுத்த பெசண்ட் நகரிலுள்ள கே.வி.ஆனந்த் வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்தது.

குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி கே.வி.ஆனந்துக்கு பிரியா விடை கொடுத்தனர்.

அதற்கு பிறகு, உடல் பெசண்ட் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, கே.வி.ஆனந்த் வீட்டுக்கு வந்த நடிகர் சூர்யா, அங்கு உடல் கொண்டுவரப்படாததால் மியாட் மருத்துவமனைக்கு சென்று கே.வி.ஆனந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

திரைப்பட  இயக்குனர் கே.வி.ஆனந்த் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்ததாக கூறியுள்ள பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திரையுலகில் மாற்றங்களைத் தேடியவர் கே.வி.ஆனந்த் என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments