கொரோனா அரசியலில் தோழர் சு. வெங்கடேசன்..! 4 நாட்களில் மாறிய கருத்து
கடந்த வருடமே சிறப்பான கொரோனா தடுப்பு பணிகளை செய்துள்ளதால், நாங்கள், யாரிடமும் பிச்சை எடுக்க போவதில்லை என்று 4 நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட நிர்வாகத்தை பாராட்டி மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
மதுரையில் இதே நிலை நீடித்தால் 10 நாட்களில் நிலைமை விபரீதமாகிவிடும் என்று திடீர் அறிக்கை விட்டுள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் வரை 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன் மட்டுமே இருந்ததாகவும் , தன்னுடைய கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சிதலைவர் சந்திர மோகன், வினய் ஐ.ஏ.எஸ் ஆகியோரின் முயற்சியால் 20000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொண்டதாக உயர்த்தப்பட்டதாக தெரிவித்திருந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
400 படுக்கைகளுக்கு மட்டுமே தரப்பட்ட நிலையில் தற்போது 1100 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் தருவதாகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்ட அவர், நாங்கள் ஆக்ஸிஜனுக்காக யாரிடமும், பிச்சையெடுக்கவோ திருடவோ வேண்டியதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த கடிதம் அனுப்பி 4 நாட்கள் முழுமையாவதற்குள்ளாக பதற்றமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சு. வெங்கடேசன். மதுரையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறிபோய்விடும் என்றும், மே 9 அல்லது 10ந்தேதிக்குள்ளாக அனைத்து படுக்கைகளும் நிரம்பி விடும் எனவே அதிக பரிசோதனைகளை நடத்தி கொரோனா பரவலை தடுக்க, மதுரையில் மக்கள் கூட்டத்துடன் இயங்கும் அனைத்து வகையான சந்தைகளையும் கட்டுப்படுத்த தனிப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் சு. வெங்கடேசன், கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு, மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பும், செயல்பாடும் தேவை..! அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எவரும், எதையும் நம்பி தன்னிறைவு அடைந்ததாக எவருக்கும் சவாலாக கூறிவிட முடியாது. தொடர்ந்து முன் எச்சரிக்கையும் கவனமுமே நம்மை இந்த கொடிய நோயில் இருந்து காக்கும்..!
Comments