ஓப்பன் த பேக் டோரும்மா… பெரியகடை பழைய டெக்னிக்... ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு ஊ..ஊ…ஊ..!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகள் மற்றும் பிரமாண்ட வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னை தியாகராய நகர், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பின் வாசல் வழியாக கடையில் கதவை திறந்து விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல கோடிகள் முதலிட்டு பிரமாண்ட கட்டிடங்களை கட்டி லட்சக்கணக்கில் விளம்பரங்களுக்கு செலவழித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வரும் பிரபல ஜவுளி மற்றும் நகைகடைகளின் மையமாக திகழ்வது சென்னை தியாகராய நகர் மற்றும் வண்ணாரபேட்டை.
கடந்த ஊரடங்கின் போது பல மாதங்கள் பெரிய கடைகள் மூடப்பட்டதால் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்த வியாபாரிகள் இந்த முறை கடையை அடைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் சற்று சுதாரித்துக் கொண்டு மாற்று ஏற்பாடுகளை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதன்படி சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெருக்களில் உள்ள பிரபல கடைகள் முன் பக்கம் அடைக்கப்பட்ட போதிலும், தங்கள் பணியாளர்களை சாலையில் நிறுத்தி, வாடிக்கையாளர்களை தங்கள் கடையின் பின் பக்க வாசல் வழியாக உள்ளே அழைத்துச்சென்று கொரோனா விதிகள் குறித்த கவலையின்றி சத்தமில்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அந்த பகுதியில் இந்த கடை அந்தக்கடை என்ற பேதமில்லாமல் பெரும்பாலான பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகள் பேக் டோரில் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து வருகின்றனர்
அதே போல சென்னை வண்ணாரப்பேட்டையில் அடைக்கப்பட்டு உள்ள துணிக்கடைகளின் முன் நிற்கும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற விரும்பாமல் ரகசியமாக தங்கள் கடைக்குள் அழைத்துச்சென்று தடையின்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.
பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்திலும் வாடிக்கையாளர்களை ஏமாற்ற மனமின்றி ஜவுளிகடைகள் வழக்கம் போல திறந்து வைத்து விற்பனையை தொடர்ந்ததால் அதிகாரிகளின் சோதனையில் சிக்கி தலா 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேர்ந்தது.
இன்னும் சில கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
கோவில் பட்டியில் முன்வாசல் கதவை மெல்ல திறந்து வைத்து விற்பனையை தொடங்கிய கோவில்பட்டி ஜவுளிக்கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த அதிகாரிகள் கடையை இழுத்துப்பூட்டினர்
இதே பேக் டோர் பார்முலாவை கடை பிடித்த பல்லாவரத்தில் உள்ள பிரபல நகைக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இத்தகைய கடைகளில் சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் முககவசத்தை மறந்து முண்டியடித்துக் கொண்டு அதிகமாக கூடுவதால் கொரோனா தொற்று எளிதாக பரவ அதிக வாய்ப்புள்ளதாக கருதி அத்தகைய கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பெல்லாம் மதுக்கடை பார்களில் தான் இது போன்ற பேக் டோர் விற்பனை நடைபெறும், ஆனால் தற்போது பெரிய கடை நடத்தும் அனைவரும் நிதி நெருக்கடியை சமாளிக்க இது போன்ற பேக் டோர் சேல்ஸ் யுக்தியை கையில் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் தங்கள் நிறுவனத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்ப நலன் கருதியாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை அனுமதித்து விற்பனை செய்ய அனுமதித்து, தங்களது வாழ்வாதாரத்தையும் அரசு காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரமாண்டக்கடை உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
Comments