இந்தியாவுக்கு ரஷ்யா உதவி..! 2 விமானங்களில் பொருட்கள்

0 4270
இந்தியாவுக்கு ரஷ்யா உதவி..! 2 விமானங்களில் பொருட்கள்

ஷ்யாவில் இருந்து இரண்டு விமானங்களில் ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள், வென்டிலேட்டர்கள், 22 டன் மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவுடனான தங்கள் நட்புறவு சிறப்பானது முன்னுரிமையானது என ரஷ்யத் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், கருவிகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் நட்பு நாடுகள் மனிதநேய அடிப்படையில் இந்தியாவுக்கு உதவி வருகின்றன.

ரஷ்யாவில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இரண்டு விமானங்கள் இன்று டெல்லிக்கு வந்து சேர்ந்தன. அவற்றில் 20 ஆக்சிஜன் தயாரிப்புக் கருவிகள், 75 வென்டிலேட்டர்கள், 150 கண்காணிப்புக் கருவிகள், 22 டன் மருந்துப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் நிக்கோலாய் குடாசேவ் டுவிட்டரில் விடுத்துள்ள வீடியோவில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிறப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மனிதநேய உதவிப் பொருட்களை ரஷ்யா அனுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள நிலைமையை ரஷ்யா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கொரோனா தொற்றுக்கு எதிரான முயற்சிகள், இருநாடுகளின் ஒத்துழைப்பில் முதன்மையாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் உதவிக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உறுதுணையாக ரஷ்யா இருக்கும் என்றும், தேவையான உதவிகளை வழங்கும் என்றும் புடின் உறுதியளித்தார்.

ரஷ்ய அதிபர் புடினுடன் பேசியது மிகச் சிறந்த உரையாடலாக அமைந்ததாகவும், இருவரும் கொரோனா சூழலை எதிர்கொண்டு சமாளிப்பது குறித்துப் பேசியதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிகளை வழங்கியதற்கு அதிபர் புடினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments