உலகின் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகிறது -ஆய்வில் தகவல்
உலகின் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நேச்சர் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் கடற்கரையோர நகரங்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நாசா நடத்திய ஆய்வில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிகா தவிர்த்து ஏனைய பகுதியில் ஆண்டுக்கு சுமார் 267 ஜிகா டன் அளவிற்கு பனிப்பாறைகள் உருகியது தெரியவந்துள்ளது.
தற்போது இந்த அளவு அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற காரணத்தினால் பனி உருகுவதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments