தடுப்பூசி போட ஆர்வம்..! சில மணி நேரங்களில் 1.33 கோடி பேர் முன்பதிவு

0 4369
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி- முன்பதிவு தொடங்கியது; முதல் நாளிலேயே சுமார் 1 கோடி பேர் தடுப்பூசி போட விரும்பி விண்ணப்பம்

18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில், ஒரே நாளில் ஒருகோடியே 33 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசு ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் மே ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்திற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு கோவின் இணையதளத்தில் தொடங்கியது. முதல் நாளிலேயே ஒரு கோடி 33 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.முதல் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் கோவின் COWIN இணையதளத்தில் விண்ணப்பம் செய்தனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவுக்காகச் செல்பேசி எண்களை உள்ளிட்டபோது பலருக்கு முதலில் ஓடிபி எண் வரவில்லை என்றும், ஓடிபி எண் வந்து அதை உள்ளிட்டுப் பதிவு செய்தோருக்குத் தடுப்பூசி போடும் நாள் எது எனத் தகவல் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அரசு, தடுப்பூசி மையங்கள், இடம், நேரப் பட்டியலைத் தயாரித்த பின்பே முன்பதிவு செய்தவர்களுக்குத் தேதி ஒதுக்கப்படும் என்றும், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமங் செயலி ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் இதுவரை 14 கோடியே 78 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 57 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகளை 3 நாட்களில் மாநிலங்களுக்கு வழங்க இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு 3வது கட்ட தடுப்பூசி திட்டத்திற்காக ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27ம் தேதி வரை 55 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments