வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0 1632
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் வேட்பாளர்கள்,முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற ஆர்டி பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றுடன் வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளே நுழையும் முன் வெப்ப பரிசோதனை செய்யப்படும் என்றும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் ஜன்னல்களுடன் கூடிய காற்றோட்டம் உள்ள பெரிய அறையாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் தபால் வாக்குகள் தனி அறையில் வைத்து அதிகாரி கண்காணிப்பில் எண்ணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பும், முடிந்த பிறகும் கிருமிநாசினி கொண்டு அறைகள் மற்றும் வாக்கு எந்திரங்கள் உள்ள பெட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments