பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு.? தமிழக மாவட்டங்கள் எவை?
நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2ஆவது அலை, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவி வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் இம்முறை, கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், அதற்கு இரையாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து பெரும்பாலானோர் குணமடைந்தாலும், மகாராஷ்டிரா, டெல்லி, உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் விநியோகத்தில் நிலவும் தேக்கம், அதிர்வலைகளை உருவாக்கி விட்டிருக்கிறது.
அண்மை நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியே பதிவாவதால், மாநில அரசுகளுடன் இணைந்து, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற மத்திய சுகாதாரத்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது, அந்தந்த மாநிலத்தின் தொற்று பாதிப்பில், 15 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இது தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே மத்திய அரசு எடுக்கும் என்று கூறப்படுகிறது. பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியமானது எனவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 15 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால் இந்த பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments