'அந்த வீட்டுக்கு சென்றால் மகள்கள் நினைவு வாட்டும்'- மனநல சிகிச்சைக்கு பிறகு கண்ணீர் விட்ட ஆந்திர தம்பதி

0 13935
ஜாமீன் பெற்ற பத்மஜா, புருஷோத்தம்

ஆந்திராவில் கடந்த ஜனவரி மாதத்தில் பெற்ற மகள்களை நரபலி கொடுத்த தம்பதியினருக்கு மனநல கிசிச்சையளிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதன பள்ளியில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி பெற்றோர்களால் அகல்யா, மற்றும் சாய்திவ்யா ஆகிய இளம் பெண்கள்  நரபலி கொடுக்கப் பட்டனர் இதில் முதல் குற்றவாளியான தாய் பத்மஜா மற்றும் இரண்டாம் குற்றவாளி புருஷோத்தம் நாயுடுவை கடந்த ஜனவரி 26ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. பத்மாஜா, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. மகள்களை நரபலி கொடுத்தாலும், மீண்டும் உயிர் பிழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் நரபலி கொடுத்தாக சொல்லப்பட்டது.

மகள்களை கொன்ற தம்பதிக்கு திருப்பதி மருத்துவமனை மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் மன நல சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று மாத சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மதனப்பள்ளி கிளைச்சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புருஷோத்தமா நாயுடுவின் நெருங்கிய உறவினர்கள் ஜாமீனுக்காக விண்ணப்பித்தனர். தொடர்ந்து, பத்மஜா, புருஷோத்தம் நாயுடு இருவருக்கும் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து , அவர்கள் இருவரும் நேற்று மாலை 4.30 மணியளவில் மதனப்பள்ளி கிளை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர், தங்கள் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த காரில் ஏறி சென்றனர்.

ஆனால், தங்கள் மகள்களை நரபலி கொடுத்த வீட்டுக்கு செல்லாமல் தங்களது சொந்த ஊரான தம்பளப்பள்ளியில் உள்ள வீட்டில் தங்க இந்த தம்பதி முடிவு செய்துள்ளனர். மேலும், மகள்களுடன் வசித்த வீட்டுக்கு சென்றால், தங்கள் மகள்களின் நினைவும் தங்களது செயலும் தங்களை வாட்டும் என்றும் தம்பதியர் கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, பத்மஜா மற்றும் புருஷோத்தமா நாயுடு ஆகியோரின் மன நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் மூடநம்பிக்கையால் தங்கள் மகள்களை அநியாயமாக கொன்று விட்டதாக அவர்கள் மனம் கலங்கியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் செய்த பாவத்தை போக்க அன்னதானம் செய்தும் அனாதை இல்லம் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிகள் செய்தும் மீதுமுள்ள காலத்தை கழிக்கப் போவதாகவும் மகள்களை கொலை செய்த தம்பதியினர் கூறியதாக உறவினர்கள் சொல்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments