கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம்..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.
ஜெர்மன் ராணுவம் மிகப் பெரிய ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலையை இந்தியாவிற்கு வழங்குகிறது. இதுதவிர ரெம்டெசிவர் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளையும், வெண்டிலேட்டர்களையும் வழங்க முன்வந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட கொரோனா பாதிப்புள்ள நாடுகளுக்கு 60 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபாசி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஆக்ஸிஜன் தயாரிப்புக்குத் தேவையான ஜெனரேட்டர்கள், அதனை சேமித்து வைக்கும் கொள்கலன்களை வழங்க பிரான்ஸ் முந்துவந்துள்ளது. இவை இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தயாரிப்புக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதாக ஜெர்மனியும் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்குத் தேவையான முக்கியமான மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக இங்கிலாந்து அறிவித்துள்ள நிலையில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு நான்கு கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்க்-களை சிங்கப்பூர் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து 80 டன் ஆக்ஸிஜன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதிக கொள்ளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலன்களை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளது.
இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹட் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட நாடுகளும், உலகின் பெருநிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன
Comments