ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு திறக்கலாம் - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

0 7887

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, தற்காலிகமாக 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது என்றும், அரசுத் தரப்பில் குழு அமைத்து கண்காணிப்பது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மூடப்பட்டு கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு  மீதான விசாரணையின்போது, ஸ்டெர்லைட்டை திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தலாமே என யோசனை கூறிய உச்சநீதிமன்றம், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி தடைபோடக் கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் காங்கிரஸ், பாமக, தேமுதிக பிரதிநிதிகள் பங்கேற்றனர். டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  

இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்களில், ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் 4 மாதம் என்பது பின்னர் நீட்டிக்கப்படலாம் என்றும், இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றுக் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய  தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் ஆலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவில், பிற உறுப்பினர்களுடன் அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் என்ஜிஓ மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவில் இருந்து மூன்று நபர்கள் இடம்பெறுவர் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments