தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியது

0 6415

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக  15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் வகைதொகையின்றி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 11,065 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 82 பேர் உயிரிழந்தனர். இந்த 82 பேரில், 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 30 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.. மேற்குவங்கத்திலிருந்து வந்த 14 பேர், பீகாரிலிருந்து வந்த 6 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 33 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 4206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1242 பேருக்கும், கோயம்புத்தூரில் 1038 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 885 பேருக்கும், மதுரையில் 603 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 558 பேருக்கும்,திருநெல்வேலியில் 549 பேருக்கும், தூத்துக்குடியில் 432 பேருக்கும், திருச்சியில் 343 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் நான்கு இலக்கத்திலும், 30 மாவட்டங்களில் மூன்று இலக்கத்திலும் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 587 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,05,180 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments