பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப எதிர்ப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழகத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜனை ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 400 டன்னாக உள்ள நிலையில், விரைவில் தேவை 450 டன்னாக அதிகரிக்கும் நிலை உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதையும், தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் தேசிய ஆக்சிஜன் ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி தமிழகத்துக்கு 220 டன் ஆக்சிஜன் எனத் தவறாகக் கணித்து, 80 டன் நீர்ம ஆக்சிஜனை ஆந்திர தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் ஆக்சிஜன் நுகர்வு ஏற்கெனவே 310 டன்னை எட்டியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை தமிழகத்தைவிடக் குறைவாக உள்ளதையும், அந்த மாநிலங்களில் பெரிய உருக்காலைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவில் இரண்டாவது அதிக நோயாளிகள் எண்ணிக்கை சென்னையில் இருக்கும்போது, திருப்பெரும்புதூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது நியாயமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்புவது சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் கடும் சிக்கலை உருவாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Comments