கொரோனா 2 ஆம் அலை நாட்டை உலுக்கி விட்டது - பிரதமர் மோடி

0 7802
கொரோனா 2 ஆம் அலை நாட்டை உலுக்கி விட்டது - பிரதமர் மோடி

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே உலுக்கி விட்டதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதாந்திர வானொலி உரையான மன்கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாட்டில் வீசி வரும் கொரோனா அலை நமது பொறுமையையும், எந்த அளவுக்கு நம்மால் வேதனையை தாங்க முடியும் என்பதையும் சோதிப்பதாக மோடி கூறினார். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தினாலும், இப்போது வீசும் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி விட்டது என்றார் மோடி.

கொரோனா குறித்த தகவல்களை நம்பத்தகுந்த ஆதாரங்களிடம் இருந்து பெற வேண்டும் என மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இந்த நெருக்கடியான நேரத்தில் பல மருத்துவர்கள் ஆன்லைனில் கவுன்சிலிங் அளிப்பது பாராட்டுக்குரியது என்றார் மோடி.  கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மத்திய அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் என மோடி கூறினார். தமது உரையின் இடையே மருத்துவர்கள் சிலருடன் பேசிய மோடி கொரோனாவின் முதலாவது அலையில் இருந்து 2 ஆவது அலை எப்படி மாறுபட்டது என வினவினார். அதற்கு அவர்கள், இரண்டாம் அலையில் தொற்று வேகமாக பரவுகிறது என பதிலளித்தனர்.

தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் என மக்களை கேட்டுக் கொண்ட மோடி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக அனுப்புவதாக தெரிவித்தார். தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும் என்ற அவர், இலவச தடுப்பூசி திட்டம் எதிர்க்காலத்திலும் தொடரும் என்றார். முடிந்த வரை அதிகம் பேருக்கு தடுப்பூசி போட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு மோடி அறிவுறுத்தினார். கொரோனாவுக்கு எதிரான போரில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பெரும்பங்கு வகிப்பதால் அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments