கர்ணனுக்கு 16 வது நாள் தியேட்டர்களுக்கு பூட்டு..! மால் தொழிலாளர்கள் சோகம்
கர்ணன் படத்தின் 16 வது நாளோடு அரசின் உத்தரவை ஏற்று அனைத்து திரையரங்குகளும் இழுத்து பூட்டப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்விழந்த ஷாப்பிங் மால் தொழிலாளர்களின் சோகம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரிய வணிகவளாகங்கள், மால்கள், திரையரங்குகள் முழுவதும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான கர்ணன் படம் ஓரளவு திரையரங்கு உரிமையாளர்கள் வாழ்வில் வசந்தம் வீசச்செய்தது. குடும்ப பார்வையாளர்களை ஈர்த்த கர்ணன் படம் வெளியான மறு நாளே 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்று அரசு அறிவிப்பு அமலுக்கு வந்தது.
முக்கியமான பெரிய திரையரங்குகள் மட்டுமே 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்த நிலையில் கோயம்பேடு ரோகினி உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகள் கட்டுப்பாடுகளை மீறி 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்ததாக கூறப்படுகின்றது.
கர்ணன் 16வது நாளை தொட்ட நிலையில் திரையரங்குகள் முழுமையாக இழுத்து மூடப்படுவதாக வந்துள்ள அறிவிப்பு சினிமா தயாரிப்பு மற்றும் திரையரங்கு தொழிலை நம்பி இருக்கின்ற ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை கலங்கவைத்துள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் கடுமையான தொழில் முடக்கத்தால் தவித்தவர்கள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதால் இந்த ஆண்டாவது விடியல் பிறக்கும் என்று கருதிய நிலையில் அதிகரித்து வரும் கொரோனாவால், மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தங்களின் வருமானமும், வாழ்வாதாரமும் அடியோடு பாதிப்படைந்துள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளும், நூற்றுக்கணக்கான ஷாப்பிங் மால்களும் முழுமையாக மூடப்படுவதால் அதில் பணிபுரிகின்ற ஆயிரக்கணகான தொழிலாளர்கள், ஊழியர்கள், வியாபாரிகள் கடுமையான வருமான இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் இவற்றை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதித்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என்று சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த முறை அமலான ஊரடங்கின் போது வாங்கிய கடனுக்கே இன்னும் வட்டி கட்டி முடியாத நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலரையும் வேதனைக்குள்ளாகி உள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊரடங்கு காலத்திலும், மாதந்தோறும் தவறாமல் ஊதியம் வழங்குவது போல தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்ற ஏழை எளிய மக்களின் நிலை அறிந்து மாதங்தோறும் அவர்களுக்கும் உரிய தொகையை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாதிப்படைந்த மக்களிடையே எழத்தொடங்கியுள்ளது.
Comments