தியேட்டர்கள், பார்கள், மால்கள் மூடல்... வழிபாட்டுதலங்களில் பக்தர்களுக்கு தடை.! ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்.!
தமிழ்நாட்டில், வருகிற 26ஆம் தேதி முதல் தியேட்டர்கள், மால்கள், பார்கள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கில், மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், அனைத்துவகை பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. பெரியக் கடைகள், ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை . அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை.
அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் உட்கார்ந்து உண்பதற்கோ, டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் குடிப்பதற்கோ அனுமதி கிடையாது.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என அறிவித்திருக்கும் தமிழக அரசு, நாள்தோறும் பூஜைகள், சடங்குகளை கோவில் ஊழியர்கள் மூலம் நடத்த மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு நடத்த மட்டும், அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும், இறுதி ஊர்வலங்கள், அதைச்சார்ந்த சடங்குகளில், 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கங்கள், குழுமங்கள் செயல்பட அனுமதியில்லை. சர்வதேச, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி .
புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ.பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோர் http://eregister.tnega.org என்ற இணையதள பக்கத்திற்கு சென்று இ.பதிவு செய்து கொள்ளலாம்.
வெளிநாடுகளிலிருந்து விமானம், கப்பல் மூலம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோர், இ.பதிவு செய்திருந்தால் மட்டுமே, தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் .
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் .
ஆன்லைன் உணவு டெலிவரி உள்ளிட்ட அனைத்துவகை இ.காமர்ஸ் சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை . தனியாக செயல்படும் மளிகை, காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் ஏசி வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . மளிகை, காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியில் செல்வோர், கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் நடமாட முயன்றாலோ, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலோ, கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
Comments